மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் மத்திய குழு–ஜப்பான் குழுவினர் ஆய்வு; சுற்றுச்சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்குகிறது


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் மத்திய குழு–ஜப்பான் குழுவினர் ஆய்வு; சுற்றுச்சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்குகிறது
x
தினத்தந்தி 11 Jun 2019 5:00 AM IST (Updated: 11 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் மத்திய குழு– ஜப்பான் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சுற்றுச்சுவர் கட்டும்பணி விரைவில் தொடங்குகிறது.

திருப்பரங்குன்றம்,

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு 224.24 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

750 படுக்கை வசதி, ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. கடந்த ஜனவரி மாதம் மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன்பின்பு கட்டுமான பணி தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அடிக்கல் நாட்டி 4 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் எந்த பணியும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று பிரதம மந்திரியின் ஸ்வத்தியா சுரக்ஷா யோஜனா திட்ட இயக்குனர் சஞ்சய் ராய் தலைமையில் 17 பேர் கொண்ட தொழில்நுட்ப மத்திய குழுவினரும், ஜப்பான் நாட்டை சேர்ந்த அதிதி பூரா தலைமையிலான 7 பேர் கொண்ட நிதிக்குழுவினரும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கக இணை இயக்குனர் சபிதா, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் வனிதா ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆய்வுக்கு பின்பு தமிழ்நாடு மருத்துவத்துறை இணை இயக்குனர் சபிதா நிருபர்களிடம் கூறியதாவது:–

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ‘மாஸ்டர் பிளான்’ மூலம் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு துறை சார்ந்த பணிகள் நடக்க உள்ளன. எனவே துறைவாரியாக கோப்புகள் தயார் செய்யப்பட்டு பணி நடந்து வருகிறது. 224.24 ஏக்கர் பரப்பளவு கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணியை ஒரு சில நாட்களில் தொடங்கி 3 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒரே இடத்தில் போதுமான இடவசதி இருப்பதை ஜப்பானிய குழுவினர் வரவேற்றுள்ளனர். அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு நிதி வழங்குவதற்காக இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் விரைவில் அதற்குரிய அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story