மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: சொத்து வரியை குறைக்க கோரி கலெக்டரிடம் வியாபாரிகள் மனு


மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: சொத்து வரியை குறைக்க கோரி கலெக்டரிடம் வியாபாரிகள் மனு
x
தினத்தந்தி 11 Jun 2019 3:00 AM IST (Updated: 11 Jun 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

காமநாயக்கன்பட்டி நாடார் மகமை சங்கத்தினர் தலைவர் அந்தோணிராஜ் தலைமையில் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘கயத்தாறு தாலுகாவில் காமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து அமைந்து உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்து உள்ள புனித பரலோக மாதா ஆலயம் மிகவும் புகழ் பெற்றதாகும். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தேர் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து கலந்து கொள்கின்றனர். தேர் திருவிழாவின்போது தேரோடும் வீதிகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. திருநாள் நெருங்கி வருவதால், உடனடியாக தேரோடும் வீதிகளில் சாலை அமைத்து தர வேண்டும். காமநாயக்கன்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளனர்.

கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், பிள்ளையார் நத்தத்தில் ராமேசுவரம் கண்மாய் அமைந்து உள்ளது. இந்த கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைநீர் கண்மாயில் தேங்குவது இல்லை. அதே நேரத்தில் விவசாய பணிகளுக்கு கரம்பை மண் தேவைப்படுகிறது. ஆகையால் இந்த ராமேசுவரம் கண்மாயில் விவசாய பணிகளுக்கு கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

புதுக்கோட்டை அருகே உள்ள பொட்டலூரணியை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பொட்டலூரணி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிழற்கூடையை காற்றாலை நிறுவனத்தை சேர்ந்த சிலர் இடித்து விட்டனர். இதனால் போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் தாளமுத்துநகர் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு வந்த சிலர் பல்வேறு உதவிகளை செய்து தருவதாக கூறி ஆதார் அட்டைகளை வாங்கினர். கடற்கரை கோவிலில் சுற்றுச்சுவர் கட்டும் பணியையும் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் ஒரு நிறுவனம் அந்த பணியை மேற்கொள்வது தெரியவந்தது. இதனால் நாங்கள் ஆதார் அட்டையை திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் தர மறுக்கின்றனர். ஆகையால் எங்கள் பகுதிக்கு வந்த அவர்கள் மீனவர்கள் இடையே பிளவுகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் எங்கள் பகுதியில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொது அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக அரசு 24 மணி நேரமும் கடையை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. சிறு வணிகர்கள் பாதிப்பு அடையாத வகையில், அவர்களுக்கு உதவும் வகையிலும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த வரிஉயர்வால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே போன்று வரி வசூலிலும் கடுமையான போக்கை கையாளுகின்றனர். ஆகையால் சொத்து வரியை குறைக்கவும், வரிவசூலில் கடுமையின்றி செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Next Story