வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வங்கி மேலாளர் கைது
வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார். மேலும் ஆபாச வீடியோ எடுத்து நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம் நடந்துள்ளது.
தேனி,
தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரத்தில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் போடி தென்றல் நகரை சேர்ந்த முத்து சிவகார்த்திகேயன் (வயது 30) என்பவர் மேலாளராக வேலை பார்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க வந்த 28 வயது பட்டதாரி பெண்ணுக்கும், முத்து சிவகார்த்திகேயனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் அழகில் மயங்கிய வங்கி மேலாளர் அவரிடம் நைசாக பேச்சுக்கொடுத்தார்.
அப்போது அவர் காதல் திருமணம் செய்தவர் என்பதும், கணவர் கேரளாவில் வேலை பார்ப்பதால் இவர் தனிமையில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் தனிமையை பயன்படுத்தி அவரை அடைய வங்கி மேலாளர் திட்டம் தீட்டினார். இதையடுத்து அந்த பெண்ணிடம் தொடர்ந்து பேசிய முத்து சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் அந்த வங்கியிலேயே வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதை உண்மை என நம்பிய அந்த பெண்ணும் வேலைக்கு சேர சம்மதம் தெரிவித்தார். அப்போது கம்பத்தில் உள்ள கிளைக்கு உயர் அதிகாரி வந்திருக்கிறார். அங்கு தன்னுடன் வந்தால் உடனடியாக வேலைக்கு சேர்த்து விடுவதாக வங்கி மேலாளர் கூறினார். அதையடுத்து அவருடன் அந்த பெண் புறப்பட்டு கம்பத்துக்கு சென்றார்.
ஆனால் அதிகாரியிடம் அழைத்து செல்வதாக கூறிய முத்து சிவகார்த்திகேயன், அந்த பெண்ணை கம்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று அவரை பலாத்காரம் செய்தததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தார். பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலமுறை தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். இதுமட்டுமின்றி அந்த வீடியோவை தனது நண்பர்களான போடியை சேர்ந்த அன்பு, சதீஸ், பாண்டி, ராஜபார்த்திபன், சிலமலையை சேர்ந்த ஈஸ்வரன் உள்பட 11 பேரிடம் அவர் கொடுத்துள்ளார். அவர்கள் அந்த வீடியோவை இளம்பெண்ணிடம் காட்டி மிரட்டியே பலமுறை உல்லாசம் அனுபவித்தனர். மேலும் அதனையும் தங்கள் செல்போன்களில் பதிவு செய்துகொண்டனர்.
பின்னர் அந்த வீடியோவை காட்டி அந்த பெண்ணை பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த விவரம், இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மனைவியை பிரிந்தார்.
இந்த நிலையில் தனது வாழ்க்கை பறிபோனதற்கு காரணமான வங்கி மேலாளர் முத்து சிவகார்த்திகேயன் உள்பட 12 பேர் மீது போடி தாலுகா போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து சிவகார்த்திகேயன், அவருடைய நண்பர் ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story