விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க, நெடுஞ்சாலையில் 103 இடங்களில் ஒளிரும் மின்விளக்கு


விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க, நெடுஞ்சாலையில் 103 இடங்களில் ஒளிரும் மின்விளக்கு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:15 AM IST (Updated: 11 Jun 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலையில் 103 இடங்களில் ஒளிரும் மின்விளக்கு பொருத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று காலை விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகள் குறித்தும், அந்த விபத்துகள் என்னென்ன காரணங்களால் ஏற்பட்டது என்பது குறித்தும், நடப்பு ஆண்டில் விபத்துகளை குறைக்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் 321.302 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 தேசிய நெடுஞ்சாலைகளும், 575 கி.மீ. தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. மாநிலத்திலேயே அதிக தூரம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் நமது மாவட்டத்தில்தான் உள்ளது. இதனால்தான் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடமும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் கடந்த 2016-ம் ஆண்டில் 915 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். 2017-ம் ஆண்டில் 834 ஆகவும், 2018-ம் ஆண்டில் 536 ஆகவும் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 5 மாதங்களில் 15 சதவீத விபத்துகள் குறைந்துள்ளது.

அதுபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு 30 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டும், பேரிகார்டு அமைத்தும் விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் 40 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது. மேலும் விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலைகளில் எல்.இ.டி. பல்புகளுடன் கூடிய உயர்கோபுர மின்விளக்குகள், மையக்கோடுகள் அமைக்க நகாய் நிறுவனம் (தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களான 103 இடங்களில் ரூ.57 லட்சத்தில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு கருத்துரு தயாரிக்கப்பட்டு கலெக்டர் மூலமாக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் உடனடியாக ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்படும். இதன் மூலம் விபத்துகள் மேலும் குறையும்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்தும், கார்களில் பயணம் செய்பவர்கள் ‘ஷீட்பெல்ட்’ அணிந்தும் சென்றாலே 60 சதவீதம் உயிரிழப்புகள் குறையும். அதுபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் கார்களில் செல்பவர்கள் வேகத்தை குறைத்து இயக்க வேண்டும். நமது மாவட்டத்தில் கொலை குற்றங்களை விட சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, காவல்துறை இணைந்து விபத்துகளை குறைக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமால், நீதிராஜன், கனகேஸ்வரி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, முதுநிலை தொழில் அலுவலர் கணேசன், உதவி கோட்ட பொறியாளர் லெனின், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story