புவனகிரி அருகே பரபரப்பு, வீடு புகுந்து பெண் டாக்டர் கடத்தல் - காதல் கணவர் உள்பட 7 பேருக்கு வலைவீச்சு


புவனகிரி அருகே பரபரப்பு, வீடு புகுந்து பெண் டாக்டர் கடத்தல் - காதல் கணவர் உள்பட 7 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:00 AM IST (Updated: 11 Jun 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய அவரது காதல் கணவர் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள கிளாவடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கலியவரதன் மகள் கோப்பெருந்தேவி (வயது 24). பல் டாக்டர். இவர் வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் வடலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் வடலூரில் வசித்து வந்தனர். அப்போது கோப்பெருந்தேவியிடம் நகை, பணம் கேட்டு கிருஷ்ணகுமார் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதில் கோபமடைந்த அவர் கிருஷ்ணகுமாரை விட்டுப்பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோப்பெருந்தேவி வீட்டில் இருந்தார். அப்போது தனது ஆதரவாளர்கள் 6 பேருடன் கிருஷ்ணகுமார் அங்கு சென்று கத்தி முனையில் கோப்பெருந்தேவியை கடத்தினார். அதனை தடுத்த அவருடைய தாய் அருள்மொழி, தங்கை சாரதாதேவி ஆகியோரை அவர்கள் தாக்கினர். தொடர்ந்து காரில் கோப்பெருந்தேவியை கடத்திக் கொண்டு கிருஷ்ணகுமார் சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமார் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story