கோவில் நிலத்தை ஆக்கிரமித்த பால் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு
காங்கேயம் அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்த தனியார் பால் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் தலைமையில் இந்து முன்னணியினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை தனியார் பால் நிறுவனத்தினர் போலியாக கிரையம் பெற்று, அதில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை கட்டுமான பணிகளை தொடங்கினர். இதன் பின்னர் சிவன்மலை இந்து சமய அறநிலையத்துறையினர் தலையிட்டு கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் நடப்பதாக புகார் தெரிவித்ததையடுத்து இந்து முன்னணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னர் அதிகாரிகள் பால்பண்ணை கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டனர்.
இவ்வாறு பணிகள் நிறுத்தப்பட்டு சுமார் 6 மாதங்கள் கடந்த பின்னரும், பால் பண்ணை நிர்வாகம் வெளியேறாமல் ராட்சத மின்விளக்குகளை அமைத்தும், 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களை சம்பந்தப்பட்ட இடத்தில் பணிக்கு அமர்த்தியும் உள்ளது.
இதனால் இரவு நேரங்களி்ல் அதிகாரிகளின் உத்தரவை மீறி பணிகள் நடக்கிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. எனவே வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் கட்டிடங்களை கையகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல் தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பனியன், ஜின்னிங், பவர்லூம், பில்டிங் மற்றும் பொது தொழிலாளர் சங்க தலைவர் துரைசாமி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சித்தராவுத்தன்பாளையம் தற்போது ஜனசக்தி நகர் என பெயரிடப்பட்டுள்ளதில் பொதுமக்களாகிய நாங்கள் 14 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். மேலும், இப்பகுதியில் மின்சார வசதி இல்லை. விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
எங்கள் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும், அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறோம். எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் விவசாய பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து பிற விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அடியாட்களை வைத்துக்கொண்டு மோட்டார் வாகனங்கள் மூலமாக கல்குவாரிக்கு தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story