உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை - திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது
திருப்பூரில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடந்தது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடுவது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டன. நகர்ப்புற, ஊரக அமைப்புகளிலும் வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டன. இந்த கூட்டங்கள் மூலமாக மொத்தம் 69 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 49 மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதம் உள்ள மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கூட்டத்தில் அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துகளுக்கு கலெக்டர் விளக்கம் அளித்தார்.
மேலும் அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டு பின்னர் வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) முருகேசன், அரசு அலுவலர்கள் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story