நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் செல்போன்கள் திருட்டு
நிலக்கோட்டை போலீஸ்நிலையம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை அருகே உள்ள விலிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 33). இவர் நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு இவர் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அவர் நேற்று காலை சுமார் 10 மணியளவில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்தது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ரகுநாதன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையின் உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 18 செல்போன்கள் மற்றும் மெமரி கார்டுகள் திருடு போயிருந்தது. மர்மநபர்கள் அவற்றை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் திண்டுக்கல்லில் இருந்து கைரேகை பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனியம்மாள் தலைமையில் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story