குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2019 3:45 AM IST (Updated: 11 Jun 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாலதிபிரகாஷ், ஆர்.டி.ஓ. ஜீவா உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வடமதுரையை அடுத்த புத்தூர் ஏ.டி. காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், எங்கள் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு புத்தூரில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து வேடசந்தூர் தாலுகா என்.புதுரோடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், நீர்வழித்தடங்கள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் எங்கள் பகுதியில் உள்ள கல்குளம், சின்னக்குளம், அரண்மனைக்குளம் உள்ளிட்ட குளங்களில் ஆக்கிரமிப்புகள் தற்போது வரை அகற்றப்படவில்லை. அதனை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆயக்குடி பேரூராட்சியை சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி பழனி எம்.எல்.ஏ.,இ.பெ.செந்தில்குமார் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் ஆதிதிராவிடர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே வீட்டுமனைப் பட்டா வைத்திருப்போரிடம் சிலர் பணத்தை பெற்றுக்கொண்டு, பயனாளிகளை தேர்வு செய்வதாகவும், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா மறுக்கப்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வீட்டுமனை இல்லாத பயனாளிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதையடுத்து வடமதுரையை சேர்ந்த நேசமணி (வயது 60) என்ற மூதாட்டி, ஒரு கோரிக்கை மனுவில், எனக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேரும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். ஆனால் எனக்கு செலவுக்கு பணம் தருவதில்லை. நான் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். தற்போது என்னால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. எனவே முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், கடந்த 5 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறேன் என கூறியிருந்தார்.

நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 453 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இலவச பயிற்சி பெறும் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது எவ்வாறு விசாரணை நடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறைக்கு அந்த மனுக்கள் எப்படி அனுப்பப்படுகிறது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாணவர்கள் கேட்டறிந்தனர். இதில் திருச்சி, கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30 சட்டக்கல்லூரி மாணவர்கள் வந்து இருந்தனர்.

Next Story