நாளை நடைபெற இருந்த கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் திடீர் ஒத்திவைப்பு - வருகிற 14-ந் தேதி நடைபெறும் என அறிவிப்பு


நாளை நடைபெற இருந்த கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் திடீர் ஒத்திவைப்பு - வருகிற 14-ந் தேதி நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 5:03 AM IST (Updated: 11 Jun 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

கிரீஷ் கர்னாட் மறைவுக்கு துக்கம் அனுசரிப்பு எதிரொலியாக, நாளை நடைபெற இருந்த கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம், வருகிற 14-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கிரீஷ் கர்னாட் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதால் நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்த கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது. வருகிற 14-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். மந்திரிசபையில் தற்போது காங்கிரசுக்கு ஒரு மந்திரி பதவி காலியாக உள்ளது. மேலும் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 2 மந்திரி பதவி காலியாக உள்ளன. ஆகமொத்தம் மந்திரிசபையில் 3 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று தகவல் வெளியானது. இதை உறுதிபடுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, டாக்டர் சுதாகர் ஆகியோர் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ரமேஷ் ஜார்கிகோளியை சமாதானப்படுத்த அவருக்கு மந்திரி பதவி வழங்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அந்த நிபந்தனைகள் ஏற்கப்படுமா என்பது இதுவரை தெரியவில்லை.

ஆட்சியை தக்கவைக்கும் பொருட்டு, மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார். அதாவது காலியாக உள்ள 3 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதன் மூலம் 3 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கவுள்ளது. வருகிற 12-ந் தேதி (நாளை) காலை 11.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்க சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சங்கர், நாகேஸ் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைப்பது உறுதி என்றும், காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, ராமலிங்கரெட்டி ஆகிய 3 பேரில் ஒருவருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த பி.எம்.பாரூக் எம்.எல்.சி.க்கு மந்திரி பதவி வழங்க குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.

இந்த நிலையில் எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கர்நாடக அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த 3 நாட்களில் அரசு நிகழ்ச்சி எதுவும் நடைபெறாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்த மந்திரிசபை விரிவாக்கம் ஒத்திவைக்கப்பட்டு 14-ந் தேதி மதியம் 1 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.


Next Story