குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - தியாகதுருகம் அருகே பரபரப்பு


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - தியாகதுருகம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:00 AM IST (Updated: 11 Jun 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே உள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் உள்ள 2 திறந்தவெளி கிணறுகளில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுக்குழாய் மூலம் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தியாகதுருகம் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக அந்த திறந்தவெளி கிணறுகளில் தற்போது குறைந்தளவே தண்ணீர் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள், விளை நிலங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலி குடங்களுடன் திரண்டு வந்து ஒகையூர்- கள்ளக்குறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையே அங்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் இன்னும் ஓரிரு நாளில் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து முறையிடுவோம், தற்போது மறியலை கைவிடுங்கள் என்றனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story