ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணிக்காக வள்ளியூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் கலெக்டர் ஷில்பா தகவல்
ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணிக்காக, வள்ளியூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணிக்காக, வள்ளியூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணி
ராதாபுரம் தாலுகா வடக்கு வள்ளியூர் பகுதி–1 மற்றும் 2 கிராமம், நாங்குநேரி–ஏர்வாடி–வள்ளியூர்–விஜயாபதி ரோட்டில் ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், வள்ளியூர் பழைய பஸ் நிலைய சந்திப்பு–நம்பியான்விளை வழியாக நான்கு வழிச்சாலையை அடைந்து, பின்னர் தெற்கு வள்ளியூர் சர்வீஸ் ரோடு வழியாக வடலிவிளை–தெற்கு வள்ளியூர் சாலையில் சென்று, வள்ளியூர்–ராதாபுரம் சாலையில் இணைந்து, இடது புறமாக திரும்பி பயணித்து பின்னர், இட்டமொழி–வள்ளியூர் சாலையில் திரும்பி மடப்புரம், கள்ளிகுளம் வழியாக செல்ல வேண்டும்.
திருச்செந்தூர் மார்க்கமாக...
இதேபோன்று திருச்செந்தூர் மார்க்கத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் வாகனங்கள், இட்டமொழி–வள்ளியூர் சாலையில் கள்ளிகுளம், மடப்புரம் வழியாக பயணித்து, வள்ளியூர்–ராதாபுரம் சாலையில் இணைந்து, இடது புறமாக திரும்பி, தெற்கு வள்ளியூர் சந்திப்பில் தெற்கு வள்ளியூர் செல்லும் சாலையில் பயணித்து, நான்குவழி சர்வீஸ் ரோட்டை அடைந்து, இடதுபுறமாக திரும்பி, நான்கு வழிச்சாலையில் பாம்பன்குளம் வரையிலும் சென்று, பின்னர் ‘யு–டர்ன்’ மேற்கொண்டு வள்ளியூர் நோக்கி நான்குவழிச் சாலையில் பயணித்து, வள்ளியூர் சர்வீஸ் ரோடு மூலம் நம்பியான்விளை வழியாக வள்ளியூர் பஸ் நிலையத்தை அடைய வேண்டும்.
ராதாபுரம் மார்க்கமாக...
வள்ளியூரில் இருந்து ராதாபுரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், வள்ளியூர் பழைய பஸ் நிலைய சந்திப்பு–நம்பியான்விளை வழியாக நான்குவழிச் சாலையை அடைந்து, பின்னர் தெற்கு வள்ளியூர் சர்வீஸ் ரோடு மூலம் வடலிவிளை–தெற்கு வள்ளியூர் சாலையில் சென்று, வள்ளியூர்–ராதாபுரம் சாலையில் இணைந்து, வலதுபுறமாக திரும்பி, கடம்பன்குளம், கும்பிளம்பாடு வழியாக ராதாபுரம் செல்ல வேண்டும்.
ராதாபுரம் மார்க்கத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் வாகனங்கள், ராதாபுரம்–வள்ளியூர் சாலையில் தெற்கு வள்ளியூர் சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி, தெற்கு வள்ளியூர்–வடலிவிளை சாலையில் சென்று, நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டை அடைந்து, இடதுபுறமாக திரும்பி நான்குவழிச்சாலையில் பாம்பன்குளம் வரை சென்று, ‘யு–டர்ன்’ மேற்கொண்டு, வள்ளியூர் நோக்கி நான்குவழிச் சாலையில் பயணித்து, வள்ளியூர் செல்லும் சர்வீஸ் ரோடு மூலம் நம்பியான்விளை வழியாக வள்ளியூர் பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை...
இந்த போக்குவரத்து மாற்றமானது அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 30–ந்தேதி வரை அமலில் இருக்கும். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் மாற்றுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணியை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story