குடிநீர் பிரச்சினையை தீர்க்க வைப்பாற்றில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வைப்பாற்றில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வைப்பாற்றில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
பொதுக்கூட்டம்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்காக நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் விளாத்திகுளம் மார்க்கெட் அருகே நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும் போது கூறியதாவது:–
குடிநீராக்கும் திட்டம்
வெற்றி பெறுவதற்கு தேர்தலில் நிற்பது வழக்கம். ஆனால் சிலர் எங்களை தோற்கடிக்க வேண்டும் என்று தேர்தலில் நின்றார்கள். ஆனால் அவர்கள் தோல்வி பெற்று துரோகி என்ற பெயரை பெற்று இன்று வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வெட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கட்சியை யாரும் உரிமை கொண்டாட முடியாது. 8 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது அமைச்சராகவும் இருக்கிறேன். ஒரு சொத்து கூட எனது பெயரில் வாங்கியதில்லை. அப்படி நான் சொத்து வாங்கியதை நிரூபித்தால், எனது பதவியை ராஜினாமா செய்வேன்.
அ.தி.மு.க. வாக்குகளை ஒருவர் பிரித்தால் தி.மு.க. வெற்றி பெறும் என நினைத்தார்கள். அது முடியவில்லை. பா.ஜனதாவும், மோடியும் தமிழகத்துக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை தி.மு.க.வினர் உருவாக்கி நாடாளுமன்ற தேர்தலில் மக்களை ஏமாற்றி உள்ளனர். எனக்கு பின்பு ஆட்சி தொடரும் என்று ஜெயலலிதா கூறினார். அது 9 தொகுதியின் வெற்றியின் மூலம் உறுதியாகி உள்ளது.
விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட வைப்பாற்றில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தீரும். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், புதூர், கயத்தாறு ஆகிய 5 ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்து கிராமங்களும் பயன்பெறும் வகையில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த பொதுக்கூட்டத்தில் கழக பேச்சாளர் திருச்சி ஹரி கிருஷ்ணன், குட்லக் செல்வராஜ், புதூர் ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், நகர செயலாளர் நெப்போலியன், முன்னாள் ஒன்றிய சேர்மன் தனஞ்செயன், காந்தி காமாட்சி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சீனி என்ற ராஜகோபால், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சுபாஷ்சந்திரபோஸ், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் தம்பிதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story