தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 11 அடி உயர்வு மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு


தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 11 அடி உயர்வு மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 11 Jun 2019 9:45 PM GMT (Updated: 11 Jun 2019 3:21 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 11 அடி உயர்ந்தது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை, 

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 11 அடி உயர்ந்தது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை 

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த மழை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் வறண்டு கிடந்த பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2,415 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் 20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 31 அடியாக உயர்ந்தது. அதாவது, ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்தது. இந்த அணைகளில் இருந்து ஒருங்கிணைந்த நிலையில் கசிவுநீர் மட்டும் வினாடிக்கு 25 கன அடி வீதம் வெளியேறுகிறது.

நம்பியாறு–கொடுமுடியாறு அணை 

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த டிசம்பர் மாதத்துக்கு பிறகு மழை பெய்யவில்லை. கோடை வெயில் கொளுத்தியதால் நம்பியாறு அணை தண்ணீர் இன்றி வறண்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருக்குறுங்குடி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதையொட்டி நம்பியாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடி அருகே நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்த தண்ணீர் நம்பியாறு மூலம் பாசனம் பெறும் குளங்களுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. திருக்குறுங்குடி பெரியகுளம் படிப்படியாக நிரம்பி வருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கொடுமுடியாறு அணை கோடை வெயில் கொளுத்தியதால் ஒரு சொட்டு தண்ணீர்கூட இன்றி கடந்த ஏப்ரல் மாதம் வறண்டது. இந்த நலையில் நெல்லை மாவட்டத்திலேயே அதிகப்படியாக கொடுமுடியாறு அணை பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 62 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 2 அடியாக இருந்தது. இது மேலும் 8 அடி உயர்ந்து நேற்று நீர்மட்டம் 10 அடியாக இருந்தது.

இதுதவிர கடனா நதி அணைக்கு வினாடிக்கு 6 கனஅடி வீதமும், ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு தலா 2 கனஅடி வீதமும் தண்ணீர் வருகிறது. இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர், குடிநீருக்காக அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு 5 கனஅடி வீதம் நர்வரத்து இருந்தது.

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு 

கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் மணிமுத்தாறு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவிக்கு மேல் உள்ள தலையணை வரை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு குறிப்பிட்ட வாகனங்களை மட்டுமே வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியபோதும் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 530 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் ½ அடி உயர்ந்து 58.30 அடியாக இருந்தது.

குற்றாலம் அருவி 

நேற்று முன்தினம் இரவில் மாஞ்சோலை பகுதியில் வீசிய சூறைக்காற்றில் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்வயர்கள் மீது விழுந்தன. இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் வந்தனர். அவர்களுடன் மணிமுத்தாறு எஸ்டேட் தொழிலாளர்களும் இணைந்து மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பணிகள் நடந்தது. அதன்பின்னர் மின்வினியோகம் செய்யப்பட்டது.

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நேற்று பகலில் மழை இல்லை, வெயில் அடித்தது. இதனால் அருவிகளில் ஆர்ப்பரித்து விழுந்த தண்ணீர் அளவு நேற்று குறைந்தது. மெயின் அருவியில் மிக குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது. ஐந்தருவி கிளைகளிலும் குறைவாகவே தண்ணீர் விழுந்தது. அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குறைவான தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். நெல்லையில் நேற்று அதிகாலை லேசான மழை பெய்தது. பகல் நேரத்தில் அவ்வப்போது வெயிலும், மேகக்கூட்டமுமாக காட்சி அளித்தது.

மழை அளவு 

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–

அம்பை – 26, ஆய்க்குடி – 15, சேரன்மாதேவி – 17, நாங்குநேரி – 13, பாளையங்கோட்டை – 16, ராதாபுரம் – 17, செங்கோட்டை – 19, தென்காசி – 18, நெல்லை – 13.

அணை பகுதிகள்:– பாபநாசம் – 64, சேர்வலாறு – 15, மணிமுத்தாறு – 18, கடனா – 16, ராமநதி – 10, கருப்பாநதி – 5, குண்டாறு – 17, நம்பியாறு – 16, கொடுமுடியாறு – 70, அடவிநயினார் – 17.


Next Story