பூண்டி ஏரி பராமரிப்பு பணிகள் தீவிரம்


பூண்டி ஏரி பராமரிப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 12 Jun 2019 4:30 AM IST (Updated: 12 Jun 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரி பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கியமான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி 1944–ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதற்காக அப்போது ஆன செலவு ரூ.65 லட்சம். அப்போதைய சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி ஏரியை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டதால் அணைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

35 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கும் திறனுடன் 760 சதுரமைல் நீர் வரத்து பரப்பளவு கொண்டதாக அமைக்கப்பட்டது. ந்த ஏரியில் 16 மதகுகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் அதிகபட்சமாக வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.

இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லு£ர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ண்ரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்படுவது வழக்கம். கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரிவறண்டு விட்டது. இந்த நிலையில் ஏரியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அதன்படி ஏரியில் பாசன கால்வாய்களில் தூர்வாரும் பணிகள், சேதம் அடைந்த கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேலும் பூண்டியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்காக 2 புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story