‘டிக்-டாக்’ வீடியோ மூலம் பள்ளி மாணவிக்கு காதல் வலை; ‘போக்சோ’ சட்டத்தில் வாலிபர் கைது


‘டிக்-டாக்’ வீடியோ மூலம் பள்ளி மாணவிக்கு காதல் வலை; ‘போக்சோ’ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2019 4:00 AM IST (Updated: 12 Jun 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ‘டிக்-டாக்’ வீடியோ மூலம் பள்ளி மாணவியை காதலில் விழ வைத்த வாலிபர் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

வேலூர் மாவட்டம் அரக்கோணம் நன்னுமியான் சாகிப் தெருவை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 20). இவர் சென்னை சூளைமேட்டில் உள்ள இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அரும்பாக்கத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

அந்த மாணவியின்செல்போன் எண்ணுக்கு ‘டிக்-டாக்’ வீடியோக்களை அனுப்பி, அவரை காதல் வலையில் அசாருதீன் விழ வைத்தார். இந்த விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரிய வந்தது. தனது மகளை அவர் கண்டித்தார். இந்தநிலையில் அந்த மாணவி கடந்த 30-ந்தேதி அசாருதீனுடன் அரக்கோணத்துக்கு ஓட்டம் பிடித்தார்.

மகள் மாயமானது குறித்து அவரது தாயார் சூளைமேடு போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘தனது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 2 மகள்களுடன் வசித்து வருகிறேன். எனது மூத்த மகள் பள்ளிக்கு சென்று ‘பேட்ஜ்’ வாங்கி வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அசாருதீனுடன் மாணவி தனது தாயாரை பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் மாலை அரும்பாக்கத்துக்கு வந்தார். இதுகுறித்து மாணவியின் தாயார் சூளைமேடு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அசாருதீனை போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

‘டிக்-டாக்’ வீடியோ மூலம் பள்ளி மாணவியை காதல் வலையில் விழ வைத்து, அவரை கடத்தி சென்றதாக அசாருதீன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் அசாருதீனை கைது செய்தனர்.

சமூக சீரழிவுக்கு ‘டிக்-டாக்’ வீடியோக்கள் வழி வகுப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். மதுரை ஐகோர்ட்டு கிளை ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதித்தது. இந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு விலக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story