கடம்பத்தூரில் மின்இணைப்பு வழங்காததால் பயன்பாட்டுக்கு வராத ஊராட்சி புதிய கட்டிடம்
கடம்பத்தூரில் மின்இணைப்பு வழங்காததால் ஊராட்சி புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சி. இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடம்பத்தூர், வெண்மனம்புதூர், கசவநல்லாத்தூர் மற்றும் கன்னியம்மன் நகர், ஆஞ்சநேயர் நகர், சரஸ்வதி நகர், ஆறுமுகம் நகர், கே.வி.ஆர்.நகர், செந்தில் நகர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், வைஷாலி நகர், கந்தசாமி நகர் என 40–க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் உள்ளன.
இந்த கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சியில் 11 துப்புரவு பணியாளர்களும், ஒரு ஊராட்சி செயலாளரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலப்பணிக்காக சாலையின் இருபுறமும் கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏற்கனவே இருந்த ஊராட்சி மன்ற அலுவலகம் இடிக்கப்பட்டு தற்போது அதன் அருகே 2016–17–ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.19 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரையிலும் அந்த புதிய கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சி கட்டிடத்துக்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அந்த புதிய கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் இந்த ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் மற்றும் 11 துப்புரவு பணியாளர்களும் அருகில் உள்ள இ.சேவை மையத்தில் ஒரு மூலையில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் ஊராட்சியில் பயன்படுத்தும் அனைத்து பதிவேடுகளும் அந்த இ.சேவை மையத்திலேயே வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, கடை உரிம கட்டணம், வாரச்சந்தை, மாதச்சந்தை போன்ற எந்த ஒரு வரிவசூலையும் வசூல் செய்ய முடியாத நிலை உள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள் தங்கள் குறைகளை சொல்ல ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடும்போது எப்போதும் பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் மனவேதனையுடன் திரும்பி செல்கின்றனர். எனவே கடம்பத்தூரில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்காமல் எப்போதும் பூட்டியே கிடக்கும் இந்த புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் தினந்தோறும் திறந்து வைத்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.