மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் சிதம்பரத்தில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தல்


மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் சிதம்பரத்தில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jun 2019 4:30 AM IST (Updated: 12 Jun 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று சிதம்பரத்தில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

புவனகிரி,

தமிழகத்தில் கடலூர் உள்பட டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும் விவசாயம் அடியோடு அழிந்து போய்விடும், கடல்வாழ் உயிரினம் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறி இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

பல இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடைமடை பகுதியாக விளங்கும் சிதம்பரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் அபாயம் குறித்து மக்களிடையே செயற்கை பேரழிவுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுவினர் நிலம் என்கிற அமைப்பின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிலம் அமைப்பின் கருத்தரங்க கூட்டம் சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு செயற்கை பேரழிவுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு தலைவர் கிள்ளை ரவிந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடேசன், ராமலிங்கம், சங்கர், பசுமை வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு தலைவர் ஜெயராமன், சமூக ஆர்வலர் ராஜமூர்த்தி, புதுச்சேரி கடற்கரை வாழ்வுரிமை இயக்க தலைவர் அருண்குமார், மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஆலோசகர் பாரதி செல்வன், சென்னை கடற்கரை வள மையம் தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இதில், பொதுமக்களின் கருத்தை கேட்காமல் இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எந்த ஒரு நிறுவனமும் எடுக்க கூடாது, ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இப்பகுதியில் விவசாயத்தை பாதுகாத்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்வது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நிர்வாகிகள் இமயவரமன், முசாருதீன், சிவபிரகாசம், செல்லப்பன், விஜயகுமார், பெரியார்செல்வம், கணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் நன்றி கூறினார்.


Next Story