அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை
பாலமேடு அருகே உள்ள கெங்கத்தூரில் குடிநீர் சீராக வழங்கக்கோரி அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் அக்கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
அலங்காநல்லூர்,
பாலமேடு அருகே தெத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கெங்கமுத்தூரில் சமீப காலகமாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கெங்கமுத்தூர் கிராம மக்கள் நேற்று அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:–
எங்கள் கிராமத்தில் 400–க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. போதிய மழையின்றி தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். தற்போது குடிநீரும் சீராக வழங்கப்படுவதில்லை. ஊராட்சி நிர்வாகத்தால் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. காவேரி கூட்டுக்குடிநீரும் எங்கள் கிராமத்திற்கு சரிவர வருவதில்லை. மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் வாரம் ஒருமுறை தண்ணீர் வருகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. அன்றாட தேவைக்கு பயன்படும் தண்ணீருக்காக, பல கிலோ மீட்டர் தூரம் அலைந்து தண்ணீர் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் ஒரு குடம் குடிநீர் ரூ.10 முதல் ரூ.20 வரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தி சம்பத்தப்பட்ட ஊராட்சி, ஒன்றிய நிர்வாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே இனியாவது குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
இந்த முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் ஒன்றிய அதிகாரிகள், போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு நாளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.