மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் கூட்டணி வெற்றி பெற்றால் பா.ஜனதாவுக்கே மீண்டும் முதல் மந்திரி பதவி - சுதீர் முங்கண்டிவார் + "||" + Sudhir munkantivar comment at Shiv Sena strong opposition

மராட்டியத்தில் கூட்டணி வெற்றி பெற்றால் பா.ஜனதாவுக்கே மீண்டும் முதல் மந்திரி பதவி - சுதீர் முங்கண்டிவார்

மராட்டியத்தில் கூட்டணி வெற்றி பெற்றால் பா.ஜனதாவுக்கே மீண்டும் முதல் மந்திரி பதவி - சுதீர் முங்கண்டிவார்
மராட்டியத்தில் கூட்டணி வெற்றி பெற்றால் பா.ஜனதாவுக்கு தான் மீண்டும் முதல்-மந்திரி பதவி என்று மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறினார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா- சிவசேனா கூட்டணி உடைந்தது. நீண்ட காலமாக கூட்டணி வைத்தே போட்டியிட்ட இரு கட்சிகளும், கடந்த சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்தன.

இதில், பா.ஜனதா 122 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனாவால் 63 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. எனவே அந்த கட்சி வேறு வழியில்லாமல் பா.ஜனதாவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது.

இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி மீண்டும் மலர்ந்தது. அபார வெற்றியும் கண்டது. வரும் செப்டம்பர்- அக்டோபர் மாத வாக்கில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தலா 134 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், எஞ்சிய தொகுதிகள் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் பா.ஜனதா மூத்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சமீபத்தில் தெரிவித்தார்.

ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற சிவசேனா தீவிரமாக உள்ளது. குறைந்தது 2½ ஆண்டுகளாவது சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரியாக இருக்கவேண்டும் என அக்கட்சி விரும்புகிறது.

எனவே சட்டமன்ற தேர்தலில் 144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சி பா.ஜனதாவை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது அமித்ஷா மீண்டும் மராட்டியத்தில் பா.ஜனதாவை சேர்ந்தவர் முதல்-மந்திரியாக பதவியேற்க அனைவரும் பாடுபடவேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதாவை சேர்ந்தவர் தான் முதல்-மந்திரி ஆவார் என நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டியத்தில் பா.ஜனதாவை சேர்ந்தவர் தான் மீண்டும் முதல்-மந்திரி ஆவார். இதனால் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. எங்கள் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் 220-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யவும் கடுமையாக உழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-மந்திரி பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என சிவசேனா கருதி உள்ள நிலையில் பா.ஜனதா மந்திரியின் இந்த கருத்து 2 கட்சிகள் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜனதா மந்திரியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவசேனா கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வருண் சர்தேசாய் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவும் 2 கட்சிகளும் மராட்டியத்தில் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துவிட்டனர். இதுபற்றி தெரியாதவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக கூட்டணியில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.

தொகுதி பங்கீடு விவகாரத்தில் இரு கட்சிகள் இடையே ஏற்பட்டு உள்ள இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.