வானவில் : மனதைக் கொள்ளை கொள்ளும் முதுமலை


வானவில் : மனதைக் கொள்ளை கொள்ளும் முதுமலை
x
தினத்தந்தி 12 Jun 2019 11:19 AM GMT (Updated: 12 Jun 2019 11:19 AM GMT)

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும்போது அந்த இடம் மனதுக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாகவும், குழந்தைகளுக்கு விஷயங்களை கற்றுத் தரக் கூடியதாகவும் இருப்பது நல்லது.

வெளியூர் பயணத்தில் பல நல்ல விஷயங்களை நேரில் பார்த்து அனுபவிக்கும் வசதியை அளிப்பதே சுற்றுலாதான். அந்த வகையில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா பகுதியாக விளங்குகிறது முதுமலை. இது நீலகிரி மலை அடிவாரத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் முக்கோண வடிவில் சந்திக்கும் விதமாக அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள மிக முக்கியமான வனப் பகுதியும் இதுவே. 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வனக் காப்பகம், தென்னிந்தியாவில் அமைந்த முதலாவது வனக் காப்பகம் ஆகும். 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தொடங்கப்பட்ட இந்த காப்பகம், பின்னர் 295 கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இது 321 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது. யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வனக் காப்பகங்களுள் இதுவும் ஒன்றாகும். முதுமலை தேசிய வனப் பூங்கா 103 கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பந்திப்பூர் சரணாலயமும், கேரளாவில் வயநாடு வன விலங்கு சரணாலயமும் உள்ளன.

முதுமலை சரணாலயத்தில் வனத்துறையின் உதவியோடு காட்டுக்குள் சென்று வந்தால் திரில் நிச்சயம். யானை, மான், மலை அணில், சிறுத்தை, காட்டு மாடுகள், புலிகளைக் கூட பார்க்கலாம். இங்குள்ள தெப்பக்காடு யானைகள் காப்பகத்தில் யானைகளுக்கு காலை, மாலை உணவு அளிப்பதைப் பார்க்கலாம். தெப்பக்காடு அருகே வனத்துறை விடுதிகள் உள்ளன. மசினகுடி ஊருக்குள்ளும் விடுதிகளும், ரிசார்ட்களும் உள்ளன. முன்பதிவு செய்துவிட்டு செல்லலாம். இயற்கை வளங்களும், வன விலங்குகளையும் அதன் வாழ்விடத்திற்கே சென்று பார்ப்பது அழகானது.

Next Story