புளியங்குடி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி; அண்ணன்–தம்பி கைது


புளியங்குடி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி; அண்ணன்–தம்பி கைது
x
தினத்தந்தி 13 Jun 2019 3:00 AM IST (Updated: 12 Jun 2019 5:56 PM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த அண்ணன்–தம்பியை போலீசார் கைது செய்தனர்.

புளியங்குடி, 

புளியங்குடி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த அண்ணன்–தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஏலச்சீட்டு நடத்தி... 

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே தலைவன்கோட்டை அரண்மனை தெருவைச் சேர்ந்தவர்கள் பார்வதி பாண்டியன் (வயது 55), ராஜேந்திரன் (48). அண்ணன்–தம்பியான இவர்கள் 2 பேரும் சேர்ந்து, அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

இவர்களிடம் தலைவன்கோட்டை, மலையடிகுறிச்சி, தாருகாபுரம், பாறைபட்டி, வெள்ளாளங்கோட்டை, சுப்பிரமணியபுரம், நகரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் ஏலச்சீட்டில் சேர்ந்து, மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர்.

ரூ.1 கோடி மோசடி 

இந்த நிலையில் ஏலச்சீட்டில் பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு காலம் முடிந்த பின்னரும் முதிர்வுத்தொகை வழங்கப்படவில்லை. பார்வதி பாண்டியன், ராஜேந்திரன் ஆகியோரிடம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஏலச்சீட்டில் சேர்ந்து, மொத்தம் ரூ.1 கோடி வரையிலும் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

ஏலச்சீட்டில் முதிர்வுத்தொகை வழங்கப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்போது பார்வதி பாண்டியன், ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் சில மாதங்களில் பணத்தை திருப்பி வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். ஆனாலும் அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

அண்ணன்–தம்பி கைது 

இதையடுத்து ஏலச்சீட்டில் பணம் செலுத்திய பாறைபட்டியைச் சேர்ந்த கருப்பையா அளித்த புகாரின்பேரில், புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்வதி பாண்டியன், ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் நேற்று சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story