மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மகன் பலி: வேதனையில் தந்தை விஷம் குடித்து தற்கொலை
மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மகன் இறந்த வேதனையில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புஞ்சைபுளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணியன் (வயது 68). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் ராஜேந்திரன் (34). இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேந்திரன் மின்வாரிய பணிகளில் ஈடுபட்டபோது மின்கம்பத்தில் ஏறினார்.
அப்போது அவர் மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மகன் ராஜேந்திரன் இறந்தது முதல் மணியன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் அவர் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மணியன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.