குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - சங்கராபுரம் அருகே பரபரப்பு


குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - சங்கராபுரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 3:30 AM IST (Updated: 13 Jun 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ளது வடசிறுவள்ளூர் கிராமம். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டன. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் குடிநீர் வழங்க மாற்று நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை 10 மணிக்கு அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தடையின்றி தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணசாமி, திருமால் மற்றும் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் செய்து ஓரிரு நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்ற னர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம்-விரியூர் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story