மாவட்டத்தில் 64 உழவர் குழுக்களுக்கு, ரூ.3½ கோடியில் வேளாண் இடுபொருட்கள் - கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் 64 உழவர் குழுக்களுக்கு, ரூ.3½ கோடியில் வேளாண் இடுபொருட்கள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:15 PM GMT (Updated: 12 Jun 2019 6:47 PM GMT)

மாவட்டத்தில் 64 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.3½ கோடி மதிப்பில் டிராக்டர், வேளாண் எந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி,

தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளின் வாழ்க்கை வளம் பெறுவதற்காக, அவர்களை ஒருங்கிணைத்து, கூட்டுப் பண்ணைய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரே கிராமத்தில் தொகுப்பாக நிலமுள்ள ஒவ்வொரு விவசாயியும் பங்கேற்பு தொகையாக குறைந்தபட்சம் ரூ.500 செலுத்தி உறுப்பினருக்கான அங்கீகாரம் பெற வேண்டும். பின்னர், 20 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு, தமிழ்நாடு அரசினால் விவசாய ஆர்வலர் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டு, இக்குழுக்களின் மூலம் கூட்டுப்பண்ணை முறை திட்டத்தின் கீழ் செயலாற்றி பயனடையலாம்.

இதனைபோன்று அருகில் உள்ள 5 விவசாய ஆர்வலர் குழுக்களை இணைத்து, ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் ரூ.5 லட்சம் மூலதன நிதியின் மூலம் பொதுப் பயன்பாட்டுக்கான டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பணிகளுக்காக பல்வேறு வேளாண் இடுபொருட்களை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் 2017-18-ம் நிதியாண்டு முதல் தற்போது வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 64 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.3 கோடியே 55 லட்சத்து 93 ஆயிரத்து 331 மதிப்பில் டிராக்டர் மற்றும் வேளாண் எந்திர தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் உற்பத்தி செலவும், சந்தைப்படுத்தும் செலவும் குறைந்து விவசாயிகள் லாபம் அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒன்றியம் வாரியாக ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 8 குழுக்களும், பெரியகுளம் ஒன்றியத்தில் 9 குழுக்களும், சின்னமனூர் ஒன்றியத்தில் 7 குழுக்களும், கடமலை-மயிலை ஒன்றியத்தில் 6 குழுக்களும், தேனி ஒன்றியத்தில் 9 குழுக்களும், உத்தமபாளையம் ஒன்றியத்தில் 9 குழுக்களும், கம்பம் ஒன்றியத்தில் 8 குழுக்களும், போடி ஒன்றியத்தில் 8 குழுக்களும் பயன்பெற்றுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story