ஊத்தங்கரை பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு கிராம மக்கள் அவதி


ஊத்தங்கரை பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Jun 2019 3:45 AM IST (Updated: 13 Jun 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கல்லாவி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ளது பாம்பாறு அணை. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் மற்றும் கொண்டம்பட்டி, மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு குழாய் மூலம், கொண்டு செல்லப்படுகிறது. பின் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை, மேல்நிலை தொட்டியிலிருந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஆண்டில் போதிய அளவு மழை பெய்யாததன் காரணமாக ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளம், குட்டை, கிணறுகள் போதிய தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. மேலும் பாம்பாற்றிலும் போதிய தண்ணீர் இல்லை. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது.

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீருக்காக பொதுமக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்து நின்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. அதிலும், கல்லாவி, புதூர்புங்கனை, மேட்டுத்தாங்கல், திருவணப்பட்டி, எக்கூர், மகனூர்பட்டி, கதவணி உள்ளிட்ட பல கிராமங்களில் 5 அல்லது 8 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யடுகிறது.

சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பொதுமக்களின் நலன்கருதி போதிய குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story