குழந்தை தொழிலாளர்களாக இருந்த 258 மாணவர்கள் மீட்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர் கலெக்டர் ரோகிணி தகவல்
சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்த 258 மாணவர்கள் மீட்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய குறிக்கோள் அனைத்து விதமான குழந்தை தொழிலாளர்கள் முறைகளை ஒழிப்பது ஆகும். குழந்தை தொழிலாளராக இருப்பது எவ்வளவு மோசமான செயல் என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் வேடுகாத்தாம்பட்டி, வி.எம்.நகர், மணியனூர், நரசோதிப்பட்டி, பள்ளப்பட்டி, பஞ்சதாங்கி ஏரி, திருவாக்கவுண்டனூர், தளவாய்ப்பட்டி, களரம்பட்டி, சேலத்தாம்பட்டி, பனங்காடு, நரசுக்காடு, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, எடப்பாடி காந்திநகர் ஆகிய பகுதிகளில் 15 குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி பள்ளிகள் உள்ளன.
இங்கு கடந்த 2 ஆண்டுகளில் கல்விகற்ற 180 மாணவர்கள் தொடர் கல்விக்காக அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்த 258 மாணவர்கள் மீட்கப்பட்டு இங்கு கல்வி பயின்று வருகின்றனர். 2018-2019-ம் ஆண்டு 164 புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பயிற்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல் அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன பணிமனைகள் மற்றும் வெள்ளிப்பட்டறைகளின் உரிமையாளர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து குழந்தை தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதில்லை என்று உறுதிமொழி பத்திரம் சமர்ப்பித்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பணிகள் குறித்து திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்கள் குறித்து தகவல் கொடுத்தால் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சேலம் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு நடந்த குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின மனித சங்கிலிக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கோட்டீஸ்வரி, குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு திட்ட அலுவலர் நிர்மலா, குழந்தை பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வெள்ளிப்பட்டறைகளில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்த கூடாது என்பதற்கான சுவரொட்டிகளை வெள்ளிப்பட்டறை சங்க பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழிைய கலெக்டர் ரோகிணி தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
Related Tags :
Next Story