மாதவரத்தில் 2 பேரின் மர்ம உறுப்பை அறுத்த வழக்கில் சைக்கோ ஆசாமி கைது
இரட்டை ஏரி மேம்பாலத்தின் கீழ் 2 பேரின் மர்ம உறுப்பை அறுத்த வழக்கில் சைக்கோ ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் 2 பேரின் மர்ம உறுப்புகளை அறுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
செங்குன்றம்,
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியை சேர்ந்தவர் இரும்புக்கடை ஊழியர் அஸ்லம் பாஷா (வயது 47). கடந்த மாதம் 25–ந்தேதி மாதவரம் இரட்டை ஏரி மேம்பாலத்தின் கீழ் மர்மஉறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய அஸ்லம்பாஷாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கடந்த 2–ந்தேதி அதே மேம்பாலத்தின் கீழ் படுத்து இருந்த நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயண பெருமாள் என்பவரும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு கிடந்தார். அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த 2 சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்ததால் சைக்கோ ஆசாமி யாராவது இதுபோல் மர்ம உறுப்பை அறுத்து வருகிறாரா? என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த ஆசாமியை பிடிக்க மாதவரம் துணை கமிஷனர் ரவளி பிரியா தலைமையில் உதவி கமிஷனர் ராமலிங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர், சப்–இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், அசோக் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக மானாமதுரை அண்ணா தெருவை சேர்ந்த முனுசாமி (36) என்பவரை கைது செய்தனர்.
கைதான முனுசாமி, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:–
நான் மானாமதுரையில் பிறந்தவன். 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு மீன் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்து வந்தது. கடந்த மாதம் 25–ந்தேதி இரவு போதையில் படுத்திருந்த அஸ்லாம் பாஷா, என்னுடன் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான், பிளேடால் அவரது மர்மஉறுப்பை அறுத்து வீசிவிட்டு வில்லிவாக்கம் சென்று விட்டேன். அதன் பிறகு ஒரு வாரமாக அந்த பக்கமே வரவில்லை.
அதன்பிறகு கடந்த 2–ந்தேதி மீண்டும் அங்கு வந்தேன். நாராயண பெருமாள் குடிபோதையில் படுத்து இருந்தார். அவரை தட்டி எழுப்பி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தேன். அவரும் ஒத்துழைக்கவில்லை. இதனால் அங்கு கிடந்த பாட்டிலை உடைத்து அதை கொண்டு அவரது மர்ம உறுப்பை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக முனுசாமி சிக்கியதாக கூடுதல் கமிஷனர் தினகரன் தெரிவித்தார்.