பேரம்பாக்கம் அருகே வேலை கிடைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
பேரம்பாக்கம் அருகே வேலை கிடைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள திருப்பந்தியூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் கார்த்திக் (வயது 30). இவர் சென்னை கிண்டியில் ஐ.டி.ஐ. படித்து விட்டு தற்போது வேலை தேடி வருகிறார்.
வேலை கிடைக்காத மனவேதனையில் இருந்த கார்த்திக் அடிக்கடி தன்னுடைய வீட்டில் உள்ளவர்களிடம் தனக்கு வேலை கிடைக்கவில்லையே என கூறி புலம்பி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கார்த்திக் வேலை கிடைக்காத ஏக்கத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த அவரது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். அங்கு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.