பழவேற்காட்டில் ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை
பழவேற்காட்டில் கட்டப்பட்டு 7 ஆண்டுகள் ஆன ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொன்னேரி,
பொன்னேரி அருகே பழவேற்காடு கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் 1,585 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த குடும்ப அட்டைகளுக்கு திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலையின் சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் பழவேற்காடு திரவுபதி அம்மன் கோவில் தெருவில் கட்டப்பட்டு கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15–ந்தேதி திறப்பு விழா நடைபெற்றது.
ஆனால் இந்த கட்டிடம் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. புதிய கட்டிடத்தில் கடையை திறந்து உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் பயன்இல்லை. புதிய கட்டிடத்தில் சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனை தடுத்து பழைய கட்டிடத்தில் இருந்து கடையை மாற்றி புதிய கட்டிடத்தில் இயங்கவும், ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி சிரமம் இல்லாமல் உணவுப்பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும் எனவும், 7 வருடங்களுக்கு முன்பு திறப்பு விழா கண்ட ரேஷன் கடையை மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், கூட்டுறவுத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.