வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலப்பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றிய அதிகாரிகள்; பெண்கள் கதறி அழுதனர்


வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலப்பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றிய அதிகாரிகள்; பெண்கள் கதறி அழுதனர்
x
தினத்தந்தி 13 Jun 2019 4:15 AM IST (Updated: 13 Jun 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலப்பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். அப்போது பெண்கள் கதறி அழுதனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்காக அதிகாரிகள் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் இருபுறமும் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக இடங்களை அளந்து குறியீடு செய்து வைத்தனர்.

அப்போது அதிகாரிகள் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட வீடுகளை கண்டறிந்து அந்த வீட்டின் உரிமையாளருக்கு வீடுகளை காலி செய்யுமாறு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முறையாக நோட்டீஸ் வழங்கினார்கள். இருப்பினும் அந்த நோட்டீசை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை அகற்றாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கள் சந்திரசேகரன், இளங்கோ, உதவி பொறியாளர் திலீபன், திருவள்ளூர் மண்டல துணை தாசில்தார் வசந்தி, வருவாய் ஆய்வாளர் ஜெய தேவி, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலப்பணிக்காக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 6 வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் திரளான போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அங்கு இருந்தவர்கள் அதிகாரிகளிடம் கெஞ்சினார்கள். வீட்டில் இருந்த பெண்கள் அதிகாரிகளிடம் தங்கள் வீட்டை இடிக்கக்கூடாது தங்களுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என மன்றாடி கேட்டனர். அப்போது அவர்கள் கண்ணீர் மல்க அழுது புலம்பியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இருப்பினும் அதிகாரிகள் பொதுமக்களிடம் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் வழங்கியும் இதுநாள்வரையிலும் வீடுகளை அப்புறப்படுத்தாததால் இனி மேலும் கால அவகாசம் வழங்க முடியாது என கூறி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 6 வீடுகளையும் அதிகாரிகள் முழுவதுமாக பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

Next Story