பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட இரிடியம் மோசடி கும்பல் கைது


பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட இரிடியம் மோசடி கும்பல் கைது
x
தினத்தந்தி 13 Jun 2019 2:45 AM IST (Updated: 13 Jun 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

7 பேர் கொண்ட இரிடியம் மோசடி கும்பலை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர்.

கொள்ளேகால்,

எலந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் 2 பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட இரிடியம் மோசடி கும்பலை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவர்களுடன் மாநில வனவிலங்கு பாதுகாப்பு வாரிய உறுப்பினர் மல்லேசப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் வந்து தங்குவதற்காக அரசு சார்பில் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த விடுதிகளில் ஒரு விடுதியை மாநில வனவிலங்கு பாதுகாப்பு வாரிய உறுப்பினர் மல்லேசப்பாவுக்கு மாநில அரசு ஒதுக்கி உள்ளது. அந்த விடுதியில் அவ்வப்போது மல்லேசப்பாவோ, அவருடைய நண்பர்களோ, குடும்ப உறுப்பினர்களோ, உறவினர்களோ சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் எலந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் இரிடியம் மோசடி கும்பல் சுற்றித்திரிவதாகவும், அவர்கள் இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான புகார்கள் வனத்துறையினருக்கும் சென்றன.

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு எலந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு 2 பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். வனத்துறையினரை பார்த்த அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 7 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது பிடிபட்டவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த நஞ்சுண்டசாமி, பிரசன்னகுமார், யமுனா, ஹேமாவதி, கான், நாகேஷ், மனோகர் ஆகியோர் என்பதும், அவர்கள் மாநில வனவிலங்கு பாதுகாப்பு வாரிய உறுப்பினர் மல்லேசப்பாவின் ஆதரவாளர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 7 பேரிடமும் வனத்துறையினர் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இரிடியம் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அதாவது அவர்கள் மாநில வனவிலங்கு பாதுகாப்பு வாரிய உறுப்பினர் மல்லேசப்பாவை தொடர்பு கொண்டு அவர் மூலம் அவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதிக்கு வந்து தங்குவார்களாம். இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவார்களாம்.

பகல் நேரங்களில் இரிடியம் மோசடியில் ஈடுபடுவார்கள். இந்த மோசடிக்காக அவர்கள் அந்த விடுதியை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த மோசடியில் மல்லேசப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையறிந்த வனத்துறையினர் அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், 2 இரிடியங்கள், ஒரு கார், 11 செல்போன்கள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதுமட்டுமல்லாமல் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மல்லேசப்பாவிடமும் விசாரணை நடத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story