புதுவையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நாராயணசாமி உத்தரவு


புதுவையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 13 Jun 2019 5:00 AM IST (Updated: 13 Jun 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் சட்டம்–ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் அஸ்வனி குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:–

புதுவை மாநிலத்தில் தற்போது கஞ்சா உள்பட பல்வேறு விதமான போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இளம் தலைமுறையினர் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். போதைப்பொருட்கள் நடமாட்டத்தை புதுவையில் முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதற்கு சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், காவல்நிலைய போலீசாரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நகர பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் கோர்ட்டும், காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.

போலீசார் மீது எவ்விதமான புகார்களுக்கும் இடம் தராமல் பணியாற்ற வேண்டும். சங்கிலி பறிப்பு, வழிப்பறி உள்ளிட்டவற்றை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். புதுவை மாநிலத்திற்கு வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story