உதவி மேலாளர் விவகாரம்: சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை


உதவி மேலாளர் விவகாரம்: சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Jun 2019 3:45 AM IST (Updated: 13 Jun 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

உதவி மேலாளர் நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட

புதுச்சேரி,

புதுவை நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் உதவி மேலாளர் பொறுப்பு சீனியர் அல்லாத நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், முறைகேடான அந்த உத்தரவினை வாபஸ் பெறவேண்டும் என்று சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் சங்கங்களின் போராட்டக்குழு வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டக்குழுவினர் நேற்று சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் மற்றும் நிர்வாகிகள் மேலாண் இயக்குனர் முருகேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து அலுவலகம் வளாகத்துக்குள் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பிரச்சினை தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதையேற்று ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story