பல ஆயிரம் கோடி ரூபாயுடன் அதிபர் தலைமறைவான வழக்கில் நகைக்கடையின் இயக்குனர்கள் 7 பேர் கைது


பல ஆயிரம் கோடி ரூபாயுடன் அதிபர் தலைமறைவான வழக்கில் நகைக்கடையின் இயக்குனர்கள் 7 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2019 3:45 AM IST (Updated: 13 Jun 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பல ஆயிரம் கோடி ரூபாயுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கில், அந்த கடையின் இயக்குனர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வருபவர் மன்சூர்கான். இவர், பொதுமக்களிடம் வசூலித்த பல ஆயிரம் கோடி ரூபாயுடன் தலைமறைவாகி விட்டார். இந்த மோசடி தொடர்பாக பணத்தை இழந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமர்சியல் தெரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் புகார் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மோசடி குறித்து கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதல்-மந்திரி குமாரசாமியின் உத்தரவின் பேரில் போலீஸ் டி.ஐ.ஜி. ரவிகாந்தேகவுடா தலைமையில் 11 போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் மன்சூர்கான் நடத்தி வரும் நகைக்கடையில் இயக்குனராக உள்ள 7 பேரை கமர்சியல் தெரு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்களது பெயர்கள் நிஜாமுதீன், நாசிர் உசேன், நவீத் அகமது, அர்பத் கான், வாசிம், அன்சர் பாட்ஷா மற்றும் தாதா பீர் என்று தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் 7 பேரிடமும் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ராகுல்குமார் விசாரணை நடத்தினார்.

குறிப்பாக மன்சூர்கான் எங்கு தலைமறைவாக உள்ளார்?, இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து ராகுல்குமார் விசாரணை மேற்கொண்டார். ஆனால் மன்சூர்கான் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என 7 பேரும் கூறியதாக தெரிகிறது. கைதான 7 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story