குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.20 கோடியில் 264 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்


குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.20 கோடியில் 264 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:15 PM GMT (Updated: 12 Jun 2019 8:31 PM GMT)

ராமநாதபுரம் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.20 கோடியில் 264 வீடுகள் கட்டும் பணி தொடங்கி உள்ளது. குடிசை பகுதிகளில் குடியிருப்பவர்களை அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்தும் வகையில் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் அல்லிக்கண்மாய், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிசையில் வசித்து வந்த மக்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தர அரசு முடிவு செய்தது. இதன்படி குடிசை மாற்று வாரியம் சார்பில் ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரூ.21 கோடி மதிப்பில் 256 வீடுகள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.

இந்த பகுதியில் குடிசைகளில் குடியிருந்தவர்களை புதிய குடியிருப்புக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் புதிய குடியிருப்பு பகுதியில் குடிநீர், பஸ் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால் அங்கு குடியேறிய மக்கள் பெரும்பாலோர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றுவிட்டனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படாததாகவே உள்ளது. இதனால் தற்போது குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 4 பிளாக்குகளில் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். மீதம் உள்ள 5 பிளாக்குகளில் யாரும் குடியேற வராமல் பூட்டியே கிடக்கிறது.

குடிநீர், போக்குவரத்து வசதி செய்து கொடுத்தால்தான் வந்து வசிக்கமுடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். இந்த நிலையில் மீதம் உள்ள மக்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிதாக ரூ.20 கோடி மதிப்பில் 264 வீடுகள் கட்ட அரசு அனுமதி வழங்கி உள்ளது. 5 பிளாக்குகளாக கட்டப்பட உள்ள இந்த குடியிருப்பு வீடுகள் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. இதற்காக குழிகள் தோண்டப்பட்டு தூண்கள் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ராட்சத கிரேன்கள் மூலம் குழிகள் தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு எந்திரங்கள் வந்துள்ளன. ஒரு வருட காலத்திற்குள் குடியிப்புகளை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி மக்கள் அனைவரையும் குடியேற செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story