பல ஆயிரம் கோடி ரூபாயுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கு; போலீஸ் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைப்பு - புகார் எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்வு


பல ஆயிரம் கோடி ரூபாயுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கு; போலீஸ் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைப்பு - புகார் எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்வு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 8:34 PM GMT)

பல ஆயிரம் கோடி ரூபாயுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கில் போலீஸ் டி.ஐ.ஜி. ரவிகாந் தேகவுடா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு சிவாஜிநகரில் மன்சூர்கான் என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது நகைக்கடையில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பிய ஆயிரக்கணக்கானோர் மன்சூர்கான் நடத்தி வரும் நகைக்கடையில் தங்களது பணத்தை முதலீடு செய்திருந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்சூர்கான் தலைமறைவாகி விட்டார்.

மேலும் அவர் கடந்த 10-ந் தேதி வெளியிட்டு இருந்த ஆடியோவில் தனது நகைக்கடையில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு, அதனை திரும்ப கொடுக்க முடியவில்லை, சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க்கிடம் கொடுத்திருந்த ரூ.400 கோடியை திரும்பதர மறுப்பதுடன் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் நான் தற்கொலை செய்ய போகிறேன் என்று பேசி இருந்தார். இந்த ஆடியோ கடந்த 10-ந் தேதி காலையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த 10-ந் தேதியில் இருந்து நகைக்கடையில் பணம் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்கள் தங்களை மன்சூர்கான் மோசடி செய்துவிட்டார் என்று அறிந்து சிவாஜிநகரில் உள்ள நகைக்கடைக்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தனர். இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் மன்சூர்கான் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது.

தலைமறைவாக இருக்கும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோசடி குறித்து கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரிக்க முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க நேற்று தீயணைப்பு துறை போலீஸ் டி.ஐ.ஜி.யான ரவிகாந்தேகவுடா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மொத்தம் 11 ேபாலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

அதாவது அந்த குழுவில் பெங்களூரு குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ், குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் பால்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகளான ரவிசங்கர், ராஜா இமாம் காசிம், அப்துல் காதர், போலீஸ் இன்ஸ்பெக்டர்களான கீதா, ராஜேஷ், அஞ்சன்குமார், தன்வீர் அகமது, சேகர் ஆகியோா் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இதற்கிடையில், மோசடி குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க சிவாஜிநகரில் உள்ள ஒரு மண்டபத்தில் போலீசார் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு வரை 11 ஆயிரம் பேர் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரில் வாடிக்கையாளர்கள் கட்டிய பணம் உள்ளிட்ட விவரங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், 3-வது நாளாக நேற்றும் புகார் அளிக்க ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிவாஜிநகருக்கு திரண்டு வந்தனர். அவ்வாறு வந்தவர்களிடம் இருந்து கமர்சியல் தெரு போலீசார் புகார்களை பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ராகுல்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘மன்சூர்கான் நகைக்கடையில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த 11 ஆயிரம் பேர் நேற்று வரை (அதாவது நேற்று முன்தினம்) புகார் அளித்திருந்தனர். இன்று (நேற்று) 2,500 பேர் புகார் அளித்துள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள மன்சூர்கானை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

நேற்று இரவு வரை ஒட்டு மொத்தமாக 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில், கர்நாடகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாட்டிலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் முதலீடு பெற்று மன்சூர்கான் மோசடி செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த மோசடியில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், மோசடி செய்த பணத்தை மன்சூர்கான் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, இந்த மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து விசாரணை நடத்த முன் வந்துள்ளனர்.


Next Story