அ.தி.மு.க.வில் முடிவெடுக்கும் அதிகாரம் அமித்ஷாவிடம் உள்ளது ரா.முத்தரசன் சொல்கிறார்


அ.தி.மு.க.வில் முடிவெடுக்கும் அதிகாரம் அமித்ஷாவிடம் உள்ளது ரா.முத்தரசன் சொல்கிறார்
x
தினத்தந்தி 12 Jun 2019 11:15 PM GMT (Updated: 12 Jun 2019 9:09 PM GMT)

அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை பிரச்சினையால் அரசின் நிர்வாகம் முடங்கி இருப்பதாகவும், அ.தி.மு.க.வில் முடிவு எடுக்கும் அதிகாரம் அமித்ஷாவிடம் இருக்கிறது என்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று இருக்கிறார். தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததால் பிற மாநிலங்களில் பா.ஜனதா வெற்றியை பெற்றிருக்கிறது. பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு மத்திய பிரதேசத்தில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது வேடிக்கையாக உள்ளது. பா.ஜனதாவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக பழிவாங்கும் நோக்கில் இந்த திட்டம் உள்ளிட்ட அழிவு திட்டங்களை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வழங்கி வருகிறார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த நினைத்தால் தற்போது நடைபெறும் போராட்டங்கள் தீவிரம் அடையும். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து, தனது நிலையை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் அதனை கர்நாடக அரசு கொடுக்க மறுக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தற்கொலை செய்யும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ‘நீட்‘ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ரூ.1500-க்கு விற்கப்பட்ட ஒரு டேங்கர் லாரி தண்ணீர் தற்போது ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைவரா? இரட்டை தலைவரா? என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. இதில் நான் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் இந்த இரட்டை தலைமை பிரச்சினையால் தமிழக அரசின் நிர்வாகம் எல்லா வகையிலும் முடங்கியுள்ளது. மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு யார் தலைமை தாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் அமித்ஷா உள்ளார். மக்களின் நம்பிக்கையை இழந்த ஒரு அரசு, மத்திய அரசின் தயவால் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்த ஆட்சிக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி உருவாக வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். மக்கள் இந்த ஆட்சியை ஏற்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசு அதனை தடுத்து நிறுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? என்பது சந்தேகம் தான். மக்களை சந்திக்க அ.தி.மு.க. அஞ்சுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதில் திறன்பட செயல்படுகிறார். கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பது எங்கள் கருத்து.

இவ்வாறு ரா.முத்தரசன் கூறினார்.

Next Story