நிலக்கோட்டை அருகே விபத்தில் இறந்த, தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


நிலக்கோட்டை அருகே விபத்தில் இறந்த, தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 12 Jun 2019 10:00 PM GMT (Updated: 12 Jun 2019 9:40 PM GMT)

நிலக்கோட்டை அருகே விபத்தில் இறந்த கூலித்தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஒச்சான் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அவருடைய மனைவி போதும்பொண்ணு, மகள்கள் ஒச்சம்மாள், திவ்யா ஆகியோர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் ஒச்சான் மட்டும் தனது சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்றார். திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பள்ளப்பட்டி அருகே அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஒச்சான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே ஒச்சானின் மனைவி போதும்பொண்ணு, திண்டுக்கல் சிறப்பு சப்-கோர்ட்டில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஒச்சானின் குடும்பத்துக்கு ரூ.11 லட்சத்து 18 ஆயிரத்தை, அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒச்சானின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி சுதாகர், அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்ற மதுரை-சேலம் அரசு பஸ்சை கோர்ட்டு அமீனாக்கள் ஜப்தி செய்தனர்.

இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் சாதாரண பஸ்சில் அந்த பயணிகள் ஏற்றி விடப்பட்டனர். இதற்கு பயணிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story