திருப்பூர் மாவட்டத்தில் மாணவர் சேர்க்கையில் சாதனை படைத்த மாநகராட்சி பள்ளி


திருப்பூர் மாவட்டத்தில் மாணவர் சேர்க்கையில் சாதனை படைத்த மாநகராட்சி பள்ளி
x
தினத்தந்தி 13 Jun 2019 3:30 AM IST (Updated: 13 Jun 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக அளவில் மாணவர் சேர்க்கை செய்து சாதனை படைத்த 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பொதுமக்கள்-பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.





அனுப்பர்பாளையம், 

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் அதிக நிதியை ஒதுக்கி மாணவர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, மாணவர்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தி வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மேலும் இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக அளவில் மாணவர் சேர்க்கை செய்து சாதனை படைத்த பள்ளி என்ற பெருமையை திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பெற்றுள்ளது. நூற்றாண்டு விழா காணும் இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் கடந்த கல்வியாண்டில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1128-ஆக இருந்தது. தமிழக அளவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் அதிக மாணவர்கள் படிக்கும் 2-வது பள்ளி என்ற பெருமையையும் இந்த பள்ளி பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்பில் 62, யு.கே.ஜி. வகுப்பில் 58 உள்பட 130 மாணவ-மாணவிகளும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 249 பேர் என மொத்தம் இந்த கல்வியாண்டில் மட்டும் 379 மாணவ-மாணவிகள் புதிதாக இந்த பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 1,400-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக அளவில் மாணவர் சேர்க்கை செய்து சாதனை படைத்த இந்த பள்ளிக்கு பொதுமக்களும், பெற்றோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியை ராதாமணி கூறியதாவது:- தமிழக அரசின் நல்ல திட்டங்களின் மூலமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எங்கள் பள்ளியில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு பள்ளி ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பே காரணமாகும். அதேபோல் பள்ளி பெற்றோர் ஆசிரியர்-சங்கம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் கூட இந்த பள்ளியில் வந்து சேர்ந்து படிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு இணையான தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக மாணவர் சேர்க்கை செய்து சாதனை படைத்த பள்ளியாக இந்த பள்ளி இருந்தாலும் 1,400 மாணவர்கள் படிக்கும் இங்கு தலைமையாசிரியை உள்பட 29 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் வகையில் இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story