கொல்லிமலையில் உருட்டு கட்டையால் அடித்து பெண் கொலை விவசாயி கைது


கொல்லிமலையில் உருட்டு கட்டையால் அடித்து பெண் கொலை விவசாயி கைது
x
தினத்தந்தி 14 Jun 2019 4:45 AM IST (Updated: 14 Jun 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் உருட்டு கட்டையால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம், 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வாழவந்திநாடு பெருமாப்பட்டி கிராமத்தை சோ்ந்தவர் கண்ணன். விவசாயி. இவருடைய மனைவி பவானி. இவரின் அக்காள் பூமணி (வயது 50). இவருடைய கணவர் சேகர்.

பூமணி தனது தங்கையின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 10 சென்ட் நிலத்தை மாடு கட்டி கொள்வதற்காக கொடுத்தார். பின்னர் அந்த இடத்தை பவானி தம்பதியினர் பராமரித்து வந்தனர். சேகர், பூமணி ஆகியோர் சேலத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வசி்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமணி பெருமாப்பட்டிக்கு வந்தார். பின்னர் அவர் பவானி குடும்பத்திற்கு வழங்கிய நிலத்தில் வாழைக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்தார். இதற்கு குழி தோண்ட சர்க்கரைபட்டி கிராமத்தை ேசர்ந்த 4 கூலி ஆட்கள் மூலம் அந்த பணியை பூமணி செய்தார்.

இதைப்பார்த்த கண்ணன் அவரிடம், எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஏன்? குழி தோண்டுகிறீர்கள் என கேட்டார். இதைற்கு பூமணி மாடு கட்டியுள்ள இடம் போக மீதமுள்ள இடத்தில் தானே குழி தோண்டுகிறேன் என அவரிடம் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இனிமேல் இதுபோன்று செய்யாதீர்கள் என கூறிவிட்டு கண்ணன் சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று பூமணி மீண்டும் வாழைக்கன்றுகள் நடுவதற்காக நிலத்தில் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டார். இதைப்பார்த்த கண்ணன் அவரிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த கண்ணன் அருகில் கிடந்த உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த பூமணி உயிருக்கு போராடினார். இதையடுத்து அங்கிருந்து கண்ணன் ஓடிவிட்டார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பூமணியை சிகிச்சைக்காக கொல்லிமலையில் உள்ள செம்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பூமணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து பூமணியின் மற்றொரு சகோதரி மங்கை வாழவந்திநாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.

பின்னர் கண்ணனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உருட்டு கட்டையால் அடித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story