தேவூர் அருகே மோட்டார்சைக்கிள்-சுற்றுலா பஸ் மோதல்: 2 வாலிபர்கள் பரிதாப சாவு திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்
தேவூர் அருகே சுற்றுலா பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது இந்த சோகம் நிகழ்ந்தது.
தேவூர்,
சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி பேரூராட்சி ஆரையான்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மணி (வயது 29). இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவரும், அதே பகுதியை சேர்ந்த முத்து மகன் கார்த்திக் (30) என்பவரும் உறவினர்கள் ஆவர். மேலும் நல்ல நண்பர்களாகவும் திகழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் கார்த்திக், மணி இருவரும் நேற்று அப்பகுதியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் மதியம் அவர்கள் அர.செட்டிப்பட்டியில் இருந்து மூலப்பாதை நோக்கி சென்றனர்.
மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார். மணி பின்னால் அமர்ந்திருந்தார். செட்டிப்பட்டி சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றபோது முன்னால் மினி வேன் ஒன்று சென்றது.
கார்த்திக் மினிவேனை முந்துவதற்காக வலதுப்புறமாக சென்றபோது அந்த வழியாக வனவாசியில் இருந்து குமாரபாளையத்திற்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற சுற்றுலா பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக், மணி இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பஸ்சை அங்கு நிறுத்தி விட்டு அதை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த இளவரசன் (26) தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தேவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். கார்த்திக், மணி ஆகியோரி்ன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பஸ் பறிமுதல் செய்யப்பட்டு தேவூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
திருமண விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது பஸ்சில் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story