தர்மபுரி மாவட்டத்தில் 7 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது பாப்பிரெட்டிப்பட்டியில் கலெக்டர் மலர்விழி பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. பாப்பிரெட்டிப்பட்டியில் ஜமாபந்தியை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்களில் வருவாய் தீர்வாய கணக்குகள் முடித்தல் தொடர்பான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா, சிட்டா மாற்றம், சாதிசான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 165 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், கலால் உதவி ஆணையர் தேன்மொழி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, தாசில்தார் சுகுமார், தனிதாசில்தார்கள் ரவிச்சந்திரன் செல்வராஜ், பெருமாள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி தலைமை யில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் தர்மபுரி உள்வட்டத்தை சேர்ந்த 16 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 125 கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை உரிய ஆய்வுக்குட்படுத்தி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜமாபந்தியில் தர்மபுரி தாசில்தார் ராதாகிருஷ்ணன், தனி தாசில்தார்கள் செல்வம், வினோதா, மாரிமுத்து மற்றும் வருவாய்த்துறை ஊரகவளர்ச்சிதுறை, வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தர்மபுரி தாலுகாவில் 2-ம் நாள் ஜமாபந்தி வருகிற 18-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோவிந்தன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் காரிமங்கலம் உள்வட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது வருவாய்த்துறை சார்பாக பட்டா, சிட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 69 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோவிந்தன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் காரிமங்கலம் தாசில்தார் கேசவமூர்த்தி, துணை தாசில்தார்கள் பாலமுருகன், கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வடிவேலன் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதாராணி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் புலிக்கரை பிர்க்காவை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 37 மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் உத்தரவிட்டார். இதில் தாசில்தார் ராஜா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி, தீர்வு காண உதவி கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மண்டல துணை தாசில்தார் ரமேஷ், தலைமையிடத்து தாசில்தார் குமரன், தனிதாசில்தார் சவுகத்அலி, வட்ட வழங்கல் அலுவலர் மாதேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று அரூர், பென்னாகரம் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடைபெற்றது.
Related Tags :
Next Story