சேலத்தில், திருமணம் முடிந்தவுடன் கழுத்தில் மாலையுடன் புதுமண தம்பதி ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம்
சேலத்தில், திருமணம் முடிந்தவுடன் கழுத்தில் மாலையுடன் புதுமண தம்பதி ‘ஹெல்மெட்‘ விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
சேலம்,
சேலம் ஜங்சன் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 28), எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயரான தனசிரியாவுக்கும் (22) நேற்று காலை சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் இருவரும் கழுத்தில் மாலையுடன் ‘ஹெல்மெட்‘ அணிந்து கொண்டு மொபட்டில் சுமார் 3 கிலோ மீட்டர் வரை ஊர்வலமாக சென்றனர்.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஊர்வலத்தை முடித்துக் கொண்டு புதுமண தம்பதி மண்டபத்துக்கு வந்தனர். அப்போது ஹெல்மெட்டோடு இருந்த அவர்களை உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இதுகுறித்து புதுமண தம்பதியான கீர்த்திராஜ், தனசிரியா கூறியதாவது:-
இருசக்கர வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்‘ அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் மக்கள் பலர் ஹெல்மெட் அணியாமலேயே செல்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு அவர்களுடைய குடும்பம் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்கள் முடிவு செய்தோம்.
அதன்படி, திருமணம் முடிந்த கையோடு கழுத்தில் மாலையுடன் ஹெல்மெட் அணிந்து கொண்டு மொபட்டில் ஊர்வலமாக சென்றோம். இதை வாகன ஓட்டிகள் பார்க்கும் போது ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story