பர்கூர், ஊத்தங்கரையில் ஜமாபந்தி நிறைவு


பர்கூர், ஊத்தங்கரையில் ஜமாபந்தி நிறைவு
x
தினத்தந்தி 13 Jun 2019 10:15 PM GMT (Updated: 13 Jun 2019 7:13 PM GMT)

பர்கூர், ஊத்தங்கரையில் ஜமாபந்தி நிறைவு பெற்றது.

பர்கூர், 

பர்கூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. இதில் மொத்தம் 831 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். அதில் 324 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. கடைசி நாளில் 79 இருளர் இன மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழும், 50 பேருக்கு குடும்ப அட்டையும், 20 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியமும், 6 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களும், ஒருவருக்கு சலவை பெட்டியும் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பர்கூர் தாசில்தார் வெங்கடேசன், தலைமையிடத்து துணை தாசில்தார் வடிவேல், வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்நாதன், பிரகா‌‌ஷ், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலரும், தனித் துணை ஆட்சியருமான குணசேகரன் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை தாசில்தார் ஜெய்சங்கர், தனி தாசில்தார் நிரஞ்சன், துணை தாசில்தார்கள் அரவிந்த், திருமுருகன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மொழி, தலைமை நில அளவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த 4-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற்ற முகாமில் மொத்தம் 872 மனுக்கள் பெறப்பட்டது. இதில், வருவாய் ஆய்வாளர் நல்லதம்பி, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க பொருளாளர் காளிராஜ் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சீனிவாசன் வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் ஆசைதம்பி நன்றி கூறினார். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Next Story