திருச்செங்கோட்டில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் தேசிய சிந்தனை பேரவை கூட்டத்தில் தீர்மானம்


திருச்செங்கோட்டில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் தேசிய சிந்தனை பேரவை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 7:36 PM GMT)

திருச்செங்கோட்டில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என தேசிய சிந்தனை பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்செங்கோடு,

திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவையின் செயற்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவையின் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு கொள்கையின் காரணமாக, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், ஏழை எளியவர்களுக்கு முறையாக கிடைப்பதற்கு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். அடுத்த வரும் 5 ஆண்டுகள் உலக அரங்கில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வல்லரசு நாடாக இந்தியா திகழும் என்றார்.

கூட்டத்தில், 2-வது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. திருச்செங்கோட்டை மையமாக வைத்து ஜவுளி பூங்கா ஒன்றினை மத்திய அரசு தொடங்கிட வேண்டும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் வெளியூர் பக்தர்கள், தங்கி ஓய்வெடுக்கவும், குளிப்பதற்கு வசதியாகவும் தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும்.

திருச்செங்கோட்டில் அரசு கலைக் கல்லூரி ஒன்று தமிழக அரசு அமைத்து தரவேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மோதிலால், செயற்குழு உறுப்பினர்கள் வஜ்ரவேல், மதியரசு, நாகராஜ், சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Next Story