அரக்கோணம் அருகே அரசுப்பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்
அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியர் பாடங்கள் சரியாக நடத்தாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசுப்பள்ளிக்கு பூட்டு போட்டனர்.
அரக்கோணம்,
வேலூர் மாவட்டம் நெமிலி தாலுகா அரும்பாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அரும்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் உள்பட 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும், பாடங்கள் சரியாக நடத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால் அதிருப்தியில் இருந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்கள் நேற்று காலை 11 மணியளவில் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்குச் சரியாக வராதது குறித்து கேள்வி எழுப்பினர். பின்னர் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென மாணவர்கள் மற்றும், தலைமை ஆசிரியரை பள்ளியை விட்டு வெளியேற்றி பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி வட்டார கல்வித்துறை கண்காணிப்பாளர் பசுபதி அங்கு உடனடியாக சென்று கிராம மக்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தலைமை ஆசிரியரை மாற்றும்படி கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மருத்துவ விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சித்தேரி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார், அரும்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். அதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து நெமிலி தாசில்தார் சதீஷ், கல்வி அதிகாரியிடம் கேட்டறிந்தார். பள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் அசம்பாவிதங்களில் ஈடுபடுவதை தடுக்க அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரபேல் லூயிஸ், சிரஞ்சீவிலு, சுந்தரபாண்டியன் ஆகியோர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story