திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் திருடிய மேலும் ஒருவர் கைது


திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் திருடிய மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2019 4:30 AM IST (Updated: 14 Jun 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவருக்கு கள்ளநோட்டு, திருட்டு வழக்குகளில்தொடர்பிருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்தவர் பொன்விஷ்ணு (வயது 24). இவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் திருப்பூர் பி.என்.ரோடு வாவிபாளையத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அவருடைய நிறுவனத்தின் பூட்டை உடைத்து 10 தையல் எந்திரங்கள், மடிக்கணினி மற்றும் ரூ.9 ஆயிரத்து 500 ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில், திருமுருகன்பூண்டி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கடந்த 8-ந்தேதி நள்ளிரவு தனிப்படை போலீசார் பாண்டியன்நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் போயம்பாளையம் அவினாஷ்நகரை சேர்ந்த ராஜா (வயது 38), பெருமாநல்லூரை சேர்ந்த ஜோதி (32) என்பது தெரிய வந்தது. மேலும் பொன்விஷ்ணு பனியன் நிறுவனத்தில் எந்திரங்களை திருடிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 தையல் எந்திரங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணக்கம்பாளையம் குமரன் காலனியை சேர்ந்த குமரேசன் (39) என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் குமரேசன் அவருடைய வீட்டருகே பதுங்கி இருப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, ஏட்டு ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் குமரேசனை மடக்கி பிடித்து கைது செய்தனர் அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 4 தையல் எந்திரங்கள், வெளிநாட்டு மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் குமரேசனிடம் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளநோட்டு, திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடையது என்பதும் அம்பலமாகி உள்ளது.

திருப்பூர் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் குமரேசன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். பனியன் நிறுவன திருட்டு வழக்கில் 3 பேரை கைது செய்து எந்திரங்கள், மடிக்கணினி மற்றும் காரை பறிமுதல் செய்த திருமுருகன்பூண்டி குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Next Story