மாவட்ட செய்திகள்

சுகாதார வளாகத்திற்கான மானியம் வழங்க வாங்கியரூ.2 ஆயிரத்தை பயனாளிகளுக்கு திருப்பி கொடுத்த அதிகாரிகள் + "||" + Purchased to provide subsidy for health care Officers who repay to Rs. 2 thousand beneficiaries

சுகாதார வளாகத்திற்கான மானியம் வழங்க வாங்கியரூ.2 ஆயிரத்தை பயனாளிகளுக்கு திருப்பி கொடுத்த அதிகாரிகள்

சுகாதார வளாகத்திற்கான மானியம் வழங்க வாங்கியரூ.2 ஆயிரத்தை பயனாளிகளுக்கு திருப்பி கொடுத்த அதிகாரிகள்
திருப்பூர் அருகே தனிநபர் சுகாதார வளாகம் கட்டுவதற்கு மானியம் வழங்க வாங்கிய ரூ.2 ஆயிரம் லஞ்சத்தை அதிகாரிகள் திருப்பி கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மங்கலம், 

நோய் நாடி, நோய் முதல்நாடி என்பார்கள். எந்த ஒரு துன்பத்தையும் வந்த பின்பு அல்லல்படுவதை விட வரும்முன் தடுப்பதே அறிவுடைமை. நோயும் அப்படித்தான். நோய் பாதிப்புக்கு ஆளானபிறகு மருத்துவ சிகிச்சை அளிப்பதை விட எப்படி வந்தது என்பதை கண்டறிவது சாலச்சிறந்தது. பல்வேறு நோய்களுக்கு அடிப்படைக்காரணம் சுகாதாரமின்மை. சுகாதாரத்தை கடைபிடிக்கும் பகுதியில் நோய் எனும் காலன் அருகில் வரஅஞ்சுவான்.

அதனால்தான் மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்தை பேணுவதில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக திறந்த வெளியில் அசுத்தம் செய்வதை தவிர்த்து ஒவ்வொரு வீ்ட்டிலும் சுகாதார வளாகம் கட்டுங்கள், அந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்துங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகளில் சுகாதார வளாகம் இல்லை. எனவே மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் தனிநபர் சுகாதார வளாகம் கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.12 ஆயிரம் மானியத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள வீடுகளில் தனிநபர் இல்ல சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அந்த மானியத்தை பெற அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக மக்கள் நல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் அந்த திட்டங்கள் மக்களை சென்றடையும் முன்பு கரைந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்து விடுகிறது. சுடுகாடு முதல் கழிவறை வரை வியாபித்து இருக்கும் லஞ்சம் குறைந்தால்தான் நாடு முன்னேற்ற பாதையில் செல்லும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அரசு மானியத்தில் சுகாதார வளாகம் கட்டினால் நமக்கும் மானியம் கிடைக்கும், கடனை வாங்கியாவது சுகாதார வளாகம் கட்டிவிடுவோம் என்று காதில், கழுத்தில், மூக்கில் கிடந்ததை கழற்றி அதை அடகு வைத்து கழிவறை கட்டினார்கள்.

கையில் பணம் இருந்தால் சொந்தமாக எப்போதோ சுகாதார வளாகம் கட்டி இருப்பார்களே, பணம் இல்லாததால்தான் அரசு மானியத்தை நம்பி சுகாதார வளாகம் கட்டி, ஆண்டுகளாக மானியத்திற்காக காத்திருந்தார்கள். காலம் கடந்ததே தவிர, மானியம் வந்து சேரவில்லை. இதற்காக ரூ.2ஆயிரம் முன்பணமாக கொடுத்தனர். ஆனாலும் பலனில்லை.

மேலும் கொடுத்த பணத்தை திரும்ப பெறவே அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது பற்றிய விவரம் வருமாறு;-

திருப்பூரின் அருகில் உள்ளது இச்சிபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் இச்சிப்பட்டி, பட்டாம்பூச்சிபாளையம், தேவராயம்பாளையம், கொத்துப்பட்டிபாளையம், கொம்பக்காடு, சிங்கப்பூர்நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 92 பேர் மத்திய அரசின் தனிநபர் இல்ல சுகாதார வளாகம் கட்டும் திட்டத்தில் ரூ.12 ஆயிரம் மானியத்தில் 2016-2017-ம் ஆண்டு சுகாதார வளாகம் கட்டினார்கள். சுகாதார வளாகம் கட்டும்போதே அப்போது இச்சிப்பட்டி ஊராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய சத்யா, சுகாதார வளாகம் கட்டும் 92 வீடுகளிலும் தலா ரூ.2 ஆயிரம் லஞ்சமாக வாங்கி உள்ளார். அந்த பணமானது புகைப்படம் எடுக்கவும், சுகாதார வளாகத்தில் பயனாளிகளின் பெயர்களை எழுதவும், வர்ணம் பூசுவதற்காகவும் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அதற்காக மானியத்திற்காக விண்ணப்பித்து காத்து இருந்தனர். விண்ணப்பித்த ஒவ்வொருவரும் ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகத்திற்கு நடையாய் நடந்து, மானியம் வந்து விட்டதா? என பலமுறை கேட்டு வந்துள்ளனர். அப்போது அதிகாரிகள் வந்து விடும், வந்து விடும் என்று கூறினார்களே தவிர கடைசிவரை வரவில்லை.

இதனால் சலித்துப்போன பொதுமக்கள் நாங்கள் கொடுத்த லஞ்சப்பணத்தையாவது திருப்பிக்கொடுங்கள் என்று கேட்டு ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். அதன்பின்னர் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மானியம் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், ரூ.2 ஆயிரம் லஞ்சப்பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.

அதன்படி மத்திய அரசின் திட்டத்தில் தனிநபர் இல்ல சுகாதார வளாகத்திற்கு விண்ணப்பித்து ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்த அந்த பணத்தை அதிகாரிகள் திருப்பிக்கொடுத்தனர். யார் யார்? பணம் கொடுத்தனர் என்ற பட்டியலை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக தேடிச்சென்று பணத்தை திருப்பி ஒப்படைத்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பயனாளிகள் கூறியதாவது:-

சிங்கப்பூர் நகரை சேர்ந்த ரூபா:-

அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் சாமானிய மக்களை சென்று சேருவது இல்லை. மேலும் அரசு திட்டத்திற்கோ, மானியத்திற்கோ விண்ணப்பித்தால் 50சதவீதம் லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது. பணம் கொடுக்க வில்லை என்றால் எந்த காரியமும் நடப்பது இல்லை. அது மட்டுமல்ல அதற்காக அலைந்து, மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது.

எனவே எங்களுக்கு மானியம் வேண்டாம். கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக கொடுங்கள் அதுபோதும். நாங்கள் உழைத்து பிழைத்துக்கொள்வோம். இந்த சுகாதார வளாகம் கட்டுவதற்கு கூட ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தோம். அந்த பணத்தை பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் திருப்பி கொடுத்து விட்டனர்.

தனிநபர் இல்ல சுகாதார வளாகம் கட்டினால் 3 மாதத்தில் ரூ.12 ஆயிரம் மானியம் கிடைக்கும் என்று கூறியதை தொடர்ந்து எனது கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை அடகு வைத்து சுகாதார வளாகம் கட்டினோம். ஆனால் விண்ணப்பித்து 3 ஆண்டுகள் ஆகியும் மானியம் கிடைக்கவில்லை. இதற்காக நாங்கள் அலைந்தே சலித்துப்போனோம். எனவே மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கொடுத்த லஞ்சப்பணத்தை இப்போதுதான் திருப்பி கொடுத்துள்ளனர்

ரூ.12 ஆயிரம் மானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தனிநபர் சுகாதார வளாகம் கட்டினோம். இதுவரை மானியம் கிடைக்கவில்லை. சுகாதார வளாகம் பணி தொடங்கும்போது புகைப்படம் எடுக்க வேண்டும்.வர்ணம் பூசவேண்டும், பயனாளிபெயர் எழுத வேண்டும் என்று லஞ்சமாக பணம் கேட்டார்கள். அப்போது ரூ.2 ஆயிரம் கொடுத்தவுடன், உங்களுக்கு 3 மாதங்களில் மானியத்தொகை ரூ.12 ஆயிரம் கிடைக்கும் என்றார்கள்.

ஆனால் இதுவரை மானியம் வந்து சேரவில்லை. அந்த தொகை கிடைக்குமா; என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. நாங்கள் கொடுத்த லஞ்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார்கள். ஆனால் மானியம் கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.

ஆஷா:- மக்களின் கஷ்டங்களை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். அரசு கொடுக்கும் மானியம்தானே எனக்கும் பாதி கொடு என்ற நிலைமைதான் உள்ளது. இது மாற வேண்டும். எங்களுக்கு அரசு மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் கொடுத்த லஞ்சப்பணம் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. தனிநபர் இல்ல சுகாதார வளாகம் கட்டுபவர்கள் ஒன்றும் குபேரன்கள் அல்ல.அன்றாடம் கூலிவேலைக்கு சென்றால்தான் அவர்களின் வயிறு நிரம்பும்.

எனவே ஏழை மக்களுக்காக அரசு கொண்டு வரும், செயல்படுத்தும் திட்டங்கள் 100 சதவீதம் என்றைக்கு மக்களை சென்றடைகிறதோ அப்போதான் அந்த திட்டம் வெற்றி பெற்றதாக கருதப்படும். இச்சிபட்டி ஊராட்சியில் 87 பயனாளிகளுக்கு இதுவரை லஞ்சப்பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி செயலர் தெரிவித்துள்ளார்.