காங்கேயம் தாலுகாவில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி 374 மனுக்கள் பெறப்பட்டன


காங்கேயம் தாலுகாவில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி 374 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 14 Jun 2019 4:15 AM IST (Updated: 14 Jun 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் தாலுகாவில் நேற்று மாவட்ட கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 374 மனுக்கள் பெறப்பட்டன.

காங்கேயம்,

காங்கேயம் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காலை 10 மணி முதல் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கேயம் வருவாய் உள்வட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர். காங்கேயம் உள்வட்டத்தைச் சேர்ந்த கத்தாங்கண்ணி, கணபதிபாளையம், படியூர், சிவன்மலை, தம்மரெட்டிபாளையம், ஆலாம்பாடி, காங்கேயம், வீரணம்பாளையம், வட்டமலை, காடையூர் ஆகிய பகுதி பொதுமக்கள் மொத்தம் 374 மனுக்கள் கொடுத்தனர்.

இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறை அலுவலர்களையும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதன்படி தகுதியான 5 பேருக்கு பட்டா மாறுதல், ஒரு பயனாளிக்கு மாற்று திறனாளிக்கான உதவித்தொகையும், ஒரு பயனாளிக்கு வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆணையும் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் உடனடி ஆணைகளை வழங்கினார்.

முன்னதாக மேற்கண்ட 10 கிராமங்களுக்கான நில அளவைகளை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த ஜமாபந்தியில் காங்கேயம் தாசில்தார் விவேகானந்தன்,மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) ஊதியூர் உள்வட்டதைச் சேர்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூர், முதலிபாளையம் ஆகிய பகுதி வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினார்கள்.

Next Story